உயிர்கள் பிறந்து வளர்ந்த வரலாற்றைத் தொல்காப்பியம் கூறுவதாவது

உயிர்கள் பிறந்து வளர்ந்த வரலாற்றைத் தொல்காப்பியம் எனும் இலக்கண நூல், உலகம் பிறந்தது முதல் உயிர்கள் தோன்றியது, வளர்ந்தது, வாழ்வுற்றது, வகைப்பட்டது, மனித வாழ்வின் ‘அகவாழ்வு’ ‘புறவாழ்வு’ என்ற இருபிரிவின் தன்மைகள், மொழிக்குரிய எழுத்து, சொல், இலக்கியம் … முதலிய இன்னோரன்ன அனைத்தையும் பற்றித் தெளிவாக விளக்குகின்றது.  இது, ‘பத்துப் பாட்டும்’, ‘எட்டுத் தொகையும்’ தோன்றிய கடைச்சங்க நூல்களுக்கு முந்தியது. கடைச்சங்கம் கி.மு.வில் சில ஆயிரம் ஆண்டுகளாவது இருத்தல் வேண்டும்; அதாவது கி.மு. 5000 அல்லது 10,000 வரை காலம் சொல்லப் படுகிறது.

தொல்காப்பியம் இக் கடைச்சங்க காலத்துக்கும் முந்தியது என்பதோடு; இவ்வொப்பரிய நூல் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ அவைக்களத்தில் அரங்கேற்றப் பட்டது என்று தெளிவாகக் கூறப்படுகிறது. இப்பாண்டியன் காலத்தில்தான், மிகப் பெரிய கடல் கோள் ஏற்பட்டுத் தென்பகுதியில் இருந்த ‘குமரிக் கண்டம்’ (Lost Lemuria) அழிந்தது. அதனால், உலக வரலாற்று மேதைகள், அக் கடல் கோள் நிகழ்ந்த காலத்தைப் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கருதுகிறார்கள். எனவே, தொல்காப்பியம், பல்லாயிரக் கணக்கான் ஆண்டுகளுக்கு முந்தியதாகும். அந்தத் தொன்மைக் காலத்திலேயே தமிழர்கள், உயிர்கள் பற்றிய ஆராய்ச்சியில் (zoology & Anthropology) மிகச் சிறந்த நிலையில் இருந்திருக்கிறார்கள்.

             “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

             இரண்டறி வதுவே அதனொடு நாவே

             மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

             நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

             ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

             ஆறறி வதுவே அவற்றொடு மனனே

             நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”

(தொல்காப்பியல் – மரபியல் – சூத்திரம் 571)

  • ஓரறிவுயிராவது உடம்பினானறியும் ஆற்றலைப் பெற்றது;
  • ஈரறிவு உயிராவது உடம்பினானும், வாயினாலும் அறியும் ஆற்றலைப் பெற்றது;
  • மூவறிவு உயிராவது உடம்பினானும், வாயினானும், மூக்கினானும் அறியும் ஆற்றலைப் பெற்றது;
  • நாலறிவு உயிராவது உடம்பினானும், வாயினானும், மூக்கினானும், கண்ணினானும் அறியும் ஆற்றலைப் பெற்றது;
  • ஐந்தறிவு உயிராவது உடம்பினானும், வாயினானும், மூக்கினானும், கண்ணினானும், செவியினானும் அறியும் ஆற்றலைப் பெற்றது;
  • ஆறறிவு உயிராவது உடம்பினானும், வாயினானும், மூக்கினானும், கண்ணினானும், செவியினானும், மனத்தினானும் அறியும் ஆற்றலைப் பெற்றது; இவ்வகையால் உயிர்கள் ஆறு வகைப்படும்.

ஓரறிவு உயிர்

                        “புல்லும் மரனும் ஓரறி வினவே

                        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(தொல்காப்பியம் – மரபியல் – சூத்திரம் 572)

புல், மரம் என்று சொல்லப் படுபவை உடம்பினாலறிபவை. இவற்றோடு கொட்டியும், தாமரையும், கழுநீரும் சேர்த்துக் கூறப்படும். (புல்லென்பது புறவயிர்ப்புடையது. மரம் என்பது அகவயிர்ப்புடையது) இவை ஓரறிவு உயிர் உடையவை.

ஈரறிவு உயிர்

                        “நந்தும் முரளும் ஈரறி வினவே

                        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(தொல்காப்பியம் – மரபியல் – சூத்திரம் 573)

‘நத்தை’ யென்று சொல்லப் படுவனவும், ‘முரள்’ என்று சொல்லப் படுபவையும் இரண்டறிவு உடையவை. ‘நத்தை’ என்பதில் ‘சங்கு’, ‘நத்தை’, ‘அலகு’, ‘நொள்ளை’ எனப்படும் உயிரினங்கள் அடங்கும்.

‘முரள்’ என்பதில் ‘சிப்பி’, ‘கிளிஞ்சல்’, ‘ஏரல்’ எனப்படும் உயிரினங்கள் அடங்கும்.

மூவறிவு உயிர்

                       “சிதலும் எறும்பும் மூவறிவினவே

                        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(தொல்- மரபியல் – சூத் 574)

‘சிதல்’ என்று சொல்லப்படுவதும், ‘எறும்பு’ என்று சொல்லப்படுபவையும் மூவறிவு உடையவை. இவற்றோடு ‘அட்டை’ எனப்படும் உயிரினமும் மூவறிவு உடையதாகக் குறிக்கப்படும்.

நாலறிவு உயிர்

                       “நண்டுந் தும்பியும் நான்கறி வினவே

                        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(தொல்- மரபியல் – சூத் 575)

‘நண்டு’ என்று சொல்லப்படுபவையும் ‘தும்பி’ என்று சொல்லப்படுபவையும் நாலறிவு உடையவை, இவற்றோடு, ‘ஞிமிறு’ என்று சொல்லப்படுபவையும் ‘சுரும்பு’ என்று சொல்லப் படுபவையும் நாலறிவு உடையதாகக் குறிக்கப்படும்.

ஐந்தறிவு உடையவை

                       “மாவும் புள்ளும் ஐயறி வினவே

                        பிறவும் உளவே அக்கிளை பிறப்பே”

(தொல்- மரபியல் – சூத் 576)

நான்கு கால்களை உடைய விலங்குகளும் பறவைகளும் ஐந்து அறிவு உடையவைகள். இவற்றுள் தவழும் பாம்பு முதலாயினவும்; நீருள் வாழ்வனவற்றுள் மீன், முதலை, ஆமை முதலாயினவும் ஐந்து அறிவு உடையவைகள் என்று குறிக்கப்படும். நான்கு கால் என்பதால் குரங்கும் ஐந்து அறிவு உடையதாகக் குறிக்கப்படும்.

ஆறறிவு உடையவை

                        “மக்கள் தாமே ஆறறிவு வுயிரே

                        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

  (தொல்- மரபியல் – சூத் 577)

மக்கள் ஆறறிவு உயிரெனப்படுவர். இவர்களோடு ‘தேவர்’, ‘அசுரர்’, ‘இயக்கர்’ முதலானோர்களும் ஆறறிவு உடைய உயிரெனக் குறிக்கப்படும்.

{முப்பத்திரண்டு உறுப்புக்களை முறையாகப் பெற்று நிறைந்த மனமும் அறிவும் உடையவனே ஆறறிவு மனிதன். பிறப்பால், ‘ஊமை’, ‘குருடு’, ‘செவிடு’ என்று இருப்பவர்கள் ஆறறிவு உடைய உயிராகக் [மனிதன்] கருதப் படுவதில்லை.}

     “ஒருசார் விலங்கும் உளவென மொழிப”

       (தொல்- மரபியல் – சூத் 578)

விலங்குகளில் உணர்ச்சியும், அறிவும், நினைவாற்றலும் உடையவை ‘கிளி’, ‘குரங்கு’, ‘யானை’ முதலியவை, இவையும் ஆறறிவு உடைய உயிரென்றே குறிக்கப்படுகின்றன.

மூலம்  :-

குருதேவர் அவர்கள் தன்னுடைய நன்பர் திரு    பெ.க.வேலாயுதம், (தமிழ்த்துறை   அரசினர் கலைக்கல்லூரி, மேலூர், மதுரை மாவட்டம்.) அவர்களுக்கு 1-17-1974 எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட செய்திகள்.

Advertisements

2 thoughts on “உயிர்கள் பிறந்து வளர்ந்த வரலாற்றைத் தொல்காப்பியம் கூறுவதாவது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s