திருமூலர் தரும் குரு வழிபாடு

Gurudevar_Devakumarar

குருதேவர்

பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி
ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார்
(தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வாரிசு)

குருதேவர் அருளிய ”திருமூலர் தரும் குரு வழிபாடு” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி 

‘குரு’ என்ற சொல் தமிழ்ச் சொல்லே!
‘குருத்து’ = முளை, கருவின் வளர்ச்சி, ஆரம்பம்.
‘குருவி’ = பறவையினங்களில் ஆரம்பமானது, சிறியது, முதலானது.
‘குருகல்’ = ஒடுக்கமான, அடக்கமான, சிறிய குருத்தோலை = வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் உள்ள இளமையான, வளமையான இலை.
‘குரு’ = அனைத்து விதமான வளர்ச்சிகளுக்கும் ஆரம்பமாக குரு உள்ளவர்.

பதினெண்சித்தர்களின் அருட்கொடை அனைத்திலும் தெளிவாக ‘குரு போற்றல்’, ‘குரு வணக்கம்’, ‘குரு வழிபாடு’, ‘குரு வழி நிற்றல்’ ……. என்ற எண்ணற்ற கருத்துச் சொற்கள் காணப்படுகின்றன.
குருவில்லா வித்தை பாழ்’, ‘ குரு தொட்டுக் காட்டாதவை சுட்டுப் போட்டாலும் வாரா’ …. என்ற மூதுரைகள் எண்ணற்று உள்ளன. இப்படி பதினெண்சித்தர்களால் வலியுறுத்தப்படும் குருவழிபாட்டை ‘நவநாத சித்தர்களில்’ ஒருவரான ‘திருமூலர்’ பரம்பொருளான சிவனை கூட வணங்க வேண்டாம்; குருவை வணங்கி வழிபட்டு ஏற்றுப் போற்றி இரண்டறக் கலந்தால் மெய்ஞ்ஞான சித்தியெல்லாம் கைவரப் பெறலாமென்று பாடுகிறார்.

சிவனை வழிபட்டார் எண்ணிலி தேவர்கள்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடில் கூடலும் ஆமே.
 - திருமூலர் திருமந்திறம்

இவரே இன்னொரு பாடலில் “எப்படி இரசவாதம் கற்றவன் மட்டமான உலோகங்களையும் உயர்ந்த பொன்னாக்கித் தருகின்றானோ! அப்படியே குருதேவர் எத்தகைய மனிதரையும் ஆணவம், *பிறப்பு( *கன்மம், சன்மம்), மாயை எனும் மும்மலங்களும் நீங்கப் பெற்ற பிறப்பிறப்பற்ற பெரியோனாக மாற்றித் தருவார்” …… என்று கருத்துப் பட பாடியுள்ளார்.

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருபொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே.
- திருமூலர் திருமந்திறம்

இத் திருமூலர் தமது தலைவனான குருதேவரின் பெருமையை அல்லா, இறை, இயவுள், கடவுள், பரம்பொருள் ….. என்றெல்லாம் குறிப்பிட்டு உணர்த்துவதை விட அழகாக, விளக்கமாக, அடக்கமாக …..

 

ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
ஆரறிவார் அந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே. (அவையடக்கம்) -
:- திருமூலர் திருமந்திறம்

இவர் மிகச் சிறந்த தமிழ்ப் பற்றாளர். பதினெண்சித்தர்களின் தாய்மொழி, இந்துமத மூல மொழி, அருளுலக ஆட்சி மொழி, அமுதமொழி …… என்று தமிழை அடுக்கடுக்காகப் போற்றிக்கொண்டிராமல் தமது தமிழ்ப் பற்றை வெளிப் படுத்துகின்றார்

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.
- திருமூலர் திருமந்திறம்.

‘எல்லாம் வல்ல இறைவன் தன்னைப் பற்றி அறியவும், தன்னை அடையவும், தன் அருளைப் பெறவும் ….. தமிழ்மொழியையே பூசை மொழியாக, மத மொழியாக, அருள் மொழியாகப் பயன்படுத்த வேண்டும் இவ்வுலகத்தார்’ என்ற பேருண்மையை விளக்கவே திருமூலர் படைக்கப் பட்டார் என்று விளக்கப்படுகிறது.
“தமிழே தெய்வ மொழி”, “தமிழே தேவமொழி”, “தமிழே கடவுள் மொழி”, “தமிழே இறைமொழி”, “தமிழே பத்தி மொழி”,“தமிழே சத்தி மொழி”, “தமிழே சித்தி மொழி”, “தமிழே முத்தி மொழி” …… என்ற பேருண்மை விளங்குகிறது இப்பாடலால்.

திருமூலர் கூறும் குருவழிபாடு பற்றி மேலும் காண

One thought on “திருமூலர் தரும் குரு வழிபாடு

Leave a comment