திருமூலர் தரும் குரு வழிபாடு – பாகம் 2

thirumanthiRam

சென்ற பதிப்பின் (திருமூலர் தரும் குரு வழிபாடு)  தொடர்ச்சி

(குருதேவர் அருளிய ”திருமூலர் தரும் குரு வழிபாடு” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி )

நவநாத சித்தரான திருமூலர், “மனித வாழ்வு மிகமிக அற்பமானது என்பதை ஒவ்வொரு மனிதனும் எண்ணிப் பார்த்திட்டால் ஆசை, ஆணவம், அகம்பாவம், வீம்பு, போட்டி, பொறாமை, பெருமை …… முதலியவைகளை யெல்லாம் விட்டொழித்து விட்ட மெய்யான குருவைச் சார்ந்தொழுகிப் பொய்யுலக மாயைகளை வென்றிடுவர்” என்ற கருத்தை விளக்க மனித வாழ்வைச் சில பாடல்களில் வெகு நுட்பமாகச் சித்தரிக்கிறார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.  - திருமூலர் திருமந்திறம்.

மனைவி நன்றாகச் சமைத்து வைக்க மூக்குப் பிடிக்க உண்ட கணவன், தனது காமப்பசி தீர அவளை அநுபவித்தான். வாழ்வு கழிந்திட ஒருநாள் இடப்பக்கம் வலிக்கிறது என்றான். உடம்பைத் தரையில் கிடத்தி ஓய்வெடுக்கலாம் என்றான். அவ்வளவுதான் அவன் மாண்டான் – படுத்தவன் எழவே இல்லை – செத்தொழிந்தான். இவன் சத்தாகச் செய்தது ஏதாவது உண்டா? குருவைத் தேடிச் சேர்த்த அருட்சொத்து உண்டா?

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச்சிவிகை ஒன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. - திருமூலர் திருமந்திறம்

நாட்டிலே பெரிய பதவியும், சிறந்த புகழையும், விரிந்த செல்வத்தையும் உடையவனே நம் ஊர்த் தலைவன். இவன் முத்துச்சிவிகை ஏறிப் புறப்பட்டால் இவனுக்கு முன்னே ஆடல் பாடல் கூட்டங்கள் போகும், இவன் பின்னே ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் செல்வார்கள்.ஆனால், இன்று இவன் இறந்ததால், காட்டு மரத்தால் கட்டிய பாடையில் தூக்கிச் செல்லப்படுகிறான். இவனுக்கு முன்னால் போனவர்கள் எல்லாம் அழுதபடி பின்னால் போகின்றார்கள். இவனுடைய இந்தப் பயணத்தின் உண்மையான மெய்ப் பயணம் ஆருயிர், ஆவி, ஆன்மா என்ற மூன்றும் மேற்கொள்ளும் பயணம்தான். அப்பயணம் வெவ்வேறு திசைகளில், வெவ்வேறு வகையான, வேறுபட்ட முடிவுகளைப் பெறச் செல்லும் பயணங்களாகிடும். அம்மூன்றுக்கும் தக்க மெய்ஞ்ஞான குருவின் வழி பெற்ற சத்தி சித்திகளே வழித்துணையாக, வழிகாட்டியாகஅமையும். குருவில்லாதவனின் இப்பயணங்கள் குருடனின் பயணங்களாகவே ஆகிடும்.

சிவிகை ஏறிச் செல்லும் பெருந்தலைவனுக்கும் பிறர் தூக்கிச்செல்ல இறுதிப் பயணம் செல்ல நேரிடும். அப்பயணம் நல்ல பயணமாக அமைந்திடச் சற்குருவை அடைந்திடல் வேண்டும். குருவழி நிற்பவனே, இறப்பின் அச்ச கூச்ச இச்சை மாச்சரிய ஆச்சரியங்களை வெல்ல முடியும். இதனை எண்ணிப் பார்த்துக்குருவை ‘குரங்குக் குட்டி தனது தாய்க் குரங்கை இறுகப் பற்றிக்கொள்வது போல்’ விடாமல் அடியொற்றிப் பற்றி வாழ்ந்திடுக! குருவே இறந்துபட்ட மாணாக்கனின் உடல் எரிந்து சாம்பலாகி நீரில் கரைக்கப்பட்ட பிறகும்; அல்லது புதைக்கப்பட்ட ஐம்பூத உடல் மக்கி மண்ணோடு மண்ணாகி விட்ட பிறகும்; அவனைப்பற்றிக் கவலைப்பட்டு அவனுடைய ஆருயிர், ஆவி, ஆன்மா …. மூன்றும் துன்புறாமல் இன்புறுவதற்கு உரிய வழிவகைகளை ஆராய்ந்து, உரிய தோதுக்களையும், ஏதுக்களையும் செய்திடுவார்.

ஆனால், மனிதன் வாழும் போது அவனது உடலுக்குச் சொந்தம் பாராட்டும் பெற்றோர், உடன் பிறந்தார், மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், தோழர்கள் ….. முதலிய அனைவருமே அவன் இறந்தவுடனேயே அவனைப் “பிணம்” என்று அழைத்து, அஞ்சி, விரைந்து புதைத்தோ, எரித்தோ ஈமச் சடங்குகளை முடித்து நீராடி அவனை மறக்க முயன்றிடுவர்.  இவற்றை எண்ணிப் பார்ப்பவர்களே! இப்பிறப்புக்கு முன் தான் அனுபவித்த வாழ்வுகளையும்; இனிமேல், இப்பிறப்புக்குப் பிறகு தான் அனுபவிக்கப் போகிற வாழ்வுகளையும்; இப்பிறப்பில், தனது வாழ்வியலில் உள்ள இன்ப துன்ப அவலக் கேவல மாயைகளையும், தொல்லைகளையும் பற்றிய பேருண்மைகளைத் தகுந்த குருவிடம் அணுக்கத் தொண்டாற்றியும், அடங்கியொடுங்கிப் பழகியும், அனைத்தையும் முழுமையாகக் காணிக்கையாக்கியும், தன்னுணர்வு அற்றுக் குருவோடு இரண்டறக் கலந்தும் ….. உணர்ந்து கொள்ளுவார்கள் மற்றவர்கள் குருவைப் பெற்றாலும் கற்பாறை மேல் வீசியெறிந்த மண்பாண்டம் போல் குருவின் உறவைச் சிதறடித்து, பதறப் பதறப் பாழும் வாழ்வை வாழ்ந்து முடித்து, அருவுருவாய்க் கதறிக் கதறி வாழ்ந்திடுவர். இந்த இழிநிலை எவருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நவநாத சித்தரான திருமூலர், மற்ற நவநாத சித்தர்களான யக்ஞவல்லியர், எண்கோண மேனியான், வால்மீகிகள், கம்பர்கள், இராமதேவர், சனகதேவர், இராவண தேவர், வசிட்ட தேவர், விசும்பாத்திர தேவர், கண்ண தேவர், தன்வந்திரி தேவர், வியாசர்கள், பெருந்தேவனார்கள், திருவள்ளுவர் ……. முதலானோர் போன்று மானுட வாழ்வியலை நுட்பமாக விளக்குகிறார்.

ஊரெல்லாம் கூட்டி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. - திருமூலர் திருமந்திறம்

என்று ஒருவன் இறந்ததும் நடக்கின்ற சமுதாயச் சடங்குகளை அழகிய வண்ண ஓவியமாக தீட்டித் தருகிறார் திருமூலர். இந்த அளவு குருவழிபாடு பற்றிச் சிறப்பாக நூல்கள் செய்த திருமூலரைப் பலரும் குருவாகப் போற்றுகிறார்களே தவிர, இவருடைய உண்மையான வரலாற்றைப் பதினெண்சித்தர் பீடாதிபதிகளின்குருபாரம்பரியம் எப்படி கூறுகிறது என்பதை அறியவோ, அறிந்ததை அறிவிக்கவோ முன் வருவார் யாருமில்லை.

//இதன் மூலம்: அச்சிட்ட குருதேவர் அறிக்கைகள் 16 மற்றும் 18 ஆகியவற்றில் இதே தலைப்பில் வெளியாகிய கட்டுரை./

3 thoughts on “திருமூலர் தரும் குரு வழிபாடு – பாகம் 2

  1. திருமூலர் காட்டும் குரு குருப்பறிதல்,, ஸ்தூல வடிவிலுள்ள குருவை அல்ல,, ஆனால் பல குருமார்கள்,, காவி வழிபாடு,, தனிமனித வழிபாட்டுக்காக, தங்களை வழி படுங்கள் என்று பேத்திக் கொண்டிருக்கிறார்கள்….

    http://www.tirumular.com/index.php/news/category/exhibitions

    Like

    1. திருமூலருக்கு முன்னும் பின்னும் தமிழகத்தில் தோன்றிய குரு நிலையில் வாழ்ந்தவர்களின் பட்டியல் மிகவும் நெடியது. மேலும் திருமூலர் தன் குருவை பற்றி பாடிய பாடல்களும் இருக்கத்தான் செய்கிறது

      Like

Leave a comment